திருச்சி பெண் குழந்தை டெல்லிக்கு கடத்தி ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை

குழந்தை (கோப்பு படம்).
லால்குடி அருகே பிறந்து 10 தினங்களில் கடத்தி ரூ 5 லட்சத்திற்கு டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் ஜானகி வயது (32). ஜானகிக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாத ஜானகி அதை விற்பனை செய்து விட செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அதே ஊரைச்சேர்ந்த பிரபு மற்றும் சண்முகவள்ளியிடம் ஒப்படைத்தார்.
பிரபு அந்த குழந்தையை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு லால்குடி அருகே மணக்கால் சூசையாபுரத்தில் வசிக்கும் அருமைகண்ணன் மகன் ஆகாஷ் வயது (35) , திருச்சி புரோக்கர் கவிதா உதவியுடன் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கருத்துரை கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் மனைவி சண்முகபிரியா என்பவர் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
பிறகு குழந்தையை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும் அதில் ரூ. 20 ஆயிரம் பிரபு எடுத்து கொண்டதாகவும் மீதம் 80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத்து உள்ளார் பிரபு. மேலும் பணத்தையும் பெற்று கொண்டு குழந்தையை பிரபு மற்றும் அவரது மனைவி சண்முக வள்ளி ஆகியோர் சேர்ந்து தனது குழந்தையை கடத்தி சென்றனர் என்றும் தனது குழந்தையை கண்டு பிடித்து தருமாறும் திருச்சி எஸ்.பி. யிடம் ஜானகி புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிக்க லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கத்துக்கு எஸ்.பி. சுஜித்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜானகியிடம் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை செய்தார். அப்போது ஜானகி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில் ஜானகியும் சேர்ந்து குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது.
லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு, லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயணி(பொறுப்பு)ஆகியோர் நடத்திய விசாரணையில் ஜானகி தனக்கு தகாத முறையில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 5.1.23 அன்று ஜானகியை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
மேலும் குழந்தையை விற்பனை செய்த இடைத்தரகர் பிரபு, இவரது 2 வது மனைவி சண்முக வள்ளி, இடைத்தரகர் ஆகாஷ் ஆகியோரையும் கடந்த 7.1.23 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் குழந்தை உயிருடன் இருக்கிறதா, யாரிடம் இருக்கிறது என்பது பற்றி தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இதில் கடத்தப்பட்ட குழந்தை டெல்லியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சண்முக பிரியா கொடுத்த தகவலின் பெரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் டெல்லி விரைந்தனர். டெல்லியில் முகாமிட்ட காவல் துறை அதிகாரிகள் டெல்லியில் குழந்தைகள் கடத்தல் கும்பல் தலைவன் கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் உள்ள வெள்ளகவி மாவட்டம் சேர்ந்த உத்யம்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் குழந்தை ரூ 5 லட்சத்துக்கு விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருச்சி போலீசார் குழந்தையை மீட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை திருச்சி கொண்டு வருவதற்கு லால்குடி சப்இன்ஸ்பெக்டர் இசைவாணி மற்றும் போலீசார் டெல்லி சென்று உள்ளனர்.பிறகு டெல்லி போலீசார் அனுமதியுடன் குழந்தை மற்றும் விலைக்கு வாங்கிய பாக்கியஸ்ரீயையும் டெல்லி புரோக்கர் கோபிநாத் ஆகியோரை கைது செய்து தமிழக போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வர உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu