திருச்சி -சென்னை தனியார் விமான சேவை இரண்டு நாட்கள் ரத்து
சென்னையில் மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு காரணமாக திருச்சி -சென்னை தனியார் விமான சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்களில் 73 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்ததால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. தரைவழிச் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கி விட்ட நிலையில் சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையமும் மழை பாதிப்பிற்கு தப்பவில்லை. சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதையில் தண்ணீர் தேங்கி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியதால் விமானங்கள் வெள்ள நீரில் மிதந்தன. மேலும் விமான நிலையத்தின் ஜெனரேட்டர், பயணிகளை ஏற்றி இறக்க பயன்படும் பேருந்துகள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.
இதனால் சென்னை விமான நிலையம் தண்ணீர் வடியும் வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படவில்லை. சென்னை விமான நிலையத்திற்கும் வெளி நகரங்களில் இருந்து விமானங்கள் வரவில்லை. வெள்ளம் முற்றிலுமாக வடிந்த பின்னர்தான் சென்னை விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த நிலையில் திருச்சி -சென்னை இடையே இயக்கப்படும் இண்டிகோ விமான நிறுவனம் சென்னை விமான நிலையம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களும் தங்களது விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu