ஆரல்வாய் மொழி -நாகர் கோவில் இடையே இரட்டை பாதையில் சோதனை ரயில் ஓட்டம்

இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததை அடுத்து நாகர்கோவில்-ஆரல்வாய்மொழி இடையே அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இந்த பாதையில் பணிகள் முடிந்த காரணத்தால் சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே அதிக ரயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல நாள் கனவு நிறைவேறப் போகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். கன்னியாகுமரி தொடங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை முக்கியமான ரயில் பாதை இருக்கிறது.
தமிழ்நாட்டில் தென்மாவட்ட மக்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கிலோ மீட்டர் பாதை இரட்டை ரெயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் 2 திட்டங்களாக நடந்து வருகிறது. மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை மணியாச்சி- தூத்துக்குடி வரை ஒரு திட்டமாகவும், மணியாச்சி- திருநெல்வேலி- நாகர்கோவில் வரை மற்றொரு திட்டமாகவும் செயல்படுத்தி வருகிறது தெற்கு ரயில்வே. இதில் மணியாச்சி- திருநெல்வேலி- நாகர்கோவில் இடையிலான பணியில் திருநெல்வேலி- ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது.அடுத்தக்கட்டமாக ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள், பாலங்கள் அமைப்பது, மின் இணைப்பு கொடுப்பது, சிக்னல் கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிந்தது. இதனைதொடர்ந்து ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள இரட்டை வழிப்பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu