ரேஷன் பொருட்களுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி சென்னையில் அறிமுகம்

ரேஷன் பொருட்களுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி சென்னையில் அறிமுகம்
X
யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் இல்லாத பணபரிவர்த்தனை நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்று தற்போது ஜி பே, பேடிஎம் போன்றவை மக்களிடம் பழக்கமாகிவிட்டது. பெரிய ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் மட்டுமே இருந்த யுபிஐ வசதி சாதாரண பெட்டிக்கடைகளிலும் வந்து விட்டது.

இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தற்போது விற்பனை முனைய இயந்திரம் மூலம், ஆதாருடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள்வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ரொக்கம் தவிர்த்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் உரிய தொகையைச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த பல்வேறு கட்டங்களாகச் சோதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 1700 நியாய விலைக்கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 9200-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூன்மாதமே இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி பொதுமக்கள் ரேஷன்கடைகளில் உள்ள க்யூஆர் குறியீட்டைதங்கள் கைபேசியில் ஸ்கேன் செய்துதொகையைச் செலுத்த முடியும்.

தற்போது, பொதுவான வங்கிக் கணக்கில் பொதுமக்கள் செலுத்தும் தொகை வரவு வைக்கப்படுவதால், தேவை அடிப்படையில் இதர கடைகளிலும் விரைவில் இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!