சென்னையில் ஐசிஎம்ஆர் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர்

சென்னையில் ஐசிஎம்ஆர் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர்
X
ஐசிஎம்ஆர் பொது சுகாதார பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில், ஐசிஎம்ஆர் பொது சுகாதார பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.

சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநருமான பேராசிரியர் பத்மஸ்ரீ பல்ராம் பார்கவா அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மாண்டவியா, நாட்டில் பொதுப் பணியாளர்களின் எண்ணிக்கையை பொது சுகாதாரப் பள்ளி அதிகரிக்கும் என்று கூறினார். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஐசிஎம்ஆரின் முயற்சிகளை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

பெருந்தொற்று நெருக்கடியின் போது இந்தியாவின் சாதனைகளை குறிப்பிட்ட அவர், உள்நாட்டு திறன் மேம்பாடு, மனித வளம் அல்லது தடுப்பூசி என எதுவாக இருந்தாலும், சுகாதார உள்கட்டமைப்பை இந்தியா வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் உலக அளவில் இந்தியாவின் நிலையை இது உயர்த்தியுள்ளது என்றும் கூறினார். இன்று, பல நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிகளை நாடுகின்றன, இது பெருமையளிக்கும் விஷயம் என்று டாக்டர் மாண்டவியா மேலும் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!