ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு: தமிழக கேரள எல்லை அருகே நடந்த சோகம்
உயிரிழந்த காட்டு யானைகள்
தமிழக கேரள எல்லையான நவக்கரை அருகே போத்தனூர் - பாலக்காடு ரயில் பாதை செல்கிறது. கேரளாவிலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது. வாளையாறை கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதிவேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன.
இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வனத்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இரயில் ஓட்டுனர் சுபயர் மற்றும் உதவியாளர் அகிலிடம் வாளையாரிடம் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை செல்லும் இரயில் என்பதால் யானை மீது மோதிய எஞ்சினை பறிமுதல் செய்துவிட்டு , பயணிகள் நலன் கருதி வேறு எஞ்சினுடன் வண்டி அனுப்பி வைக்கப்பட்டது. 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.
கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்க அனுமதித்த ரயில்வேதுறையை அப்பகுதிவிவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையையும் வனத்துறையினர் அலட்சியப்படுத்தியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்து 3 பேருயிர்கள் இன்னுயிரை இழந்துள்ளதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இருமாநில அரசுகளும், ரயில்வேதுறையும் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த ரயில் தடத்தில் மட்டும் 28 யானைகள் உயிரிழந்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu