திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி: 8 ரயில்கள் ரத்து, 20 ரயில்கள் தாமதம்
பைல் படம்
Trichy, 8 trains cancelled- திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி நடந்து வருவதால், 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக வந்து செல்கிறது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், 8 ரயில்களை ரத்து செய்திருப்பதாகவும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, புதிய ரயில்வே தடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படவில்லை. சிக்னல்கள் முழுவதுமாக ஊழியர்களை கொண்டு மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த பணிகள் காரணமாக ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து, திருச்சி சந்திப்புக்கு வரும் அனைத்து ரயில்களும் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்து சேருகிறது. திருச்சி பொன்மலை மற்றும் திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வழித்தடத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சிக்கு வரும் ரயில்கள், திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரயில் தாமதமாகவும், அதில் சிலவற்றில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முன்பதிவு இல்லாத ரயில்கள், இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முன்பதிவு இல்லாத ரயில்கள், பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள், ரத்து செய்யப்பட்டு இருப்பதும், முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள், 5 மணி நேரம் வரை, தாமதமாக வந்து செல்வதும் ரயில் பயணிகளை கடுமையாக பாதித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu