திமுக ஆட்சியில் முற்றிலும் சீர்குலைந்த சட்டம் -ஒழுங்கு: ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).
திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி சங்கர், அதே பகுதியைச் சேர்ந்த நால்வரால் கொடூரமாக வெட்டப்பட்டிருக்கிறார். பா.ம.க. நிர்வாகி மீதான இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உடல் முழுவதும் காயமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சங்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காவல்துறையின் அலட்சியமும், செயலின்மையும் தான் காரணம் ஆகும். பா.ம.க. நிர்வாகி சங்கரின் சகோதரர் பிரபு என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான சங்கரை நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்கக் கூடாது என்று கொலையாளிகள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் சங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததும், சங்கருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததும் தான் கொலை முயற்சி தாக்குதலுக்கு காரணம் ஆகும்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தான் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அச்சத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே பா.ம.க. நிர்வாகியை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது கடலூர் மாவட்ட காவல்துறையின் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை அதன் தவறை ஒப்புக்கொள்ளாமல், கொலைமுயற்சிக்கு ஆளான சங்கரும், அவரை கொலை செய்ய முயன்றவர்களும் வன்னியர்கள் தான் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு இந்த வழக்கின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயல்வது அருவருக்கத்தக்க செயலாகும்.
சென்னையில் தொடங்கி நெல்லை வரை தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.
தமிழக அரசும், காவல்துறையுன் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரை கொலை செய்ய முயன்றவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu