தமிழகத்தில் நாளை, பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு
தமிழகத்தில், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு (கோப்பு படம்)
Tomorrow, plus 2 result release- தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில் மட்டும், 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் சுமார் 50,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. பின்னர், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு மே 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இணையதளங்களில் தேர்வு முடிவு:
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளைஅறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதால், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தனித்தேர்வர்கள் உள்ளிட்டோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும், பரபரப்பு காணப்படுகிறது. நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதைத் தொடர்ந்து, நாளை மறுதினம் 9ம் தேதி முதல் கல்லுாரிகளில், பட்டப்படிப்புக்களில் மாணவ, மாணவியர் சேருவதற்கான விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu