தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
நெடுஞ்சாலை சுங்கச்சாவடி - கோப்புப்படம்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.
இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம் எங்கெங்கு உயர்த்தப்படுகிறது?
அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மணகெதி சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ்கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கல்லக்குடி சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர பாஸ் கட்டணம் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி, சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் சுங்கச்சாவடி கட்டணம் ரத்த செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளுக்கு அறிவித்திருந்தன. இப்படியான சூழலில், சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu