பொங்கல் பரிசு ரூ.1000 பெறுவதற்கு வருகிற 30-ந்தேதி முதல் 'டோக்கன்'
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 பெறுவதற்கு வருகிற 30-ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி அறிவித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ரொக்க பரிசு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பரிசு தொகை எவ்வாறு வழங்கப்படும் என்பது பற்றி அப்போது எதுவும் கூறப்படவில்லை.
இந்த நிலையில் சென்னையில் இன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 2 கோடியை 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.ஆயிரம் மற்றும் பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.
இதற்காக டிசம்பர் 30ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்படும். டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1, 2 ,3 ஆகிய தேதிகளில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனைப் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் நியாய விலை கடைகளுக்கு நேரடியாக சென்று பரிசு தொகுப்பினையும் ரொக்க பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். பரிசுத்தொகை ரொக்கமாக நேரடியாக தான் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கின் மூலம் அல்ல.
மாற்றுத்திறனாளிகள் ,வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக வர முடியவில்லை என்றால் அதற்கான படிவத்தை நியாய விலை கடையில் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களுக்கான நாமினியிடம் பரிசுத்தொகை வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறுகிறார்கள். பொங்கல் பரிசு தொகை பற்றி முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆதலால் விவசாயிகளின் போராட்டம் அவர்களது கோரிக்கை பற்றி முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu