இன்றைய சிந்தனை ( 25.04.2022) 'துயரினைக் களையுங்கள்...!

துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. இந்தத் துயரம் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயை போன்றது. புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக..'
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது.ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.துன்பங்களை நம்முடைய மனத்திற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். இதனால் விளையும் துயரினால் மனச் சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்.எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை விட்டுவிட்டு இரண்டலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைச் சிக்கல்களை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம்.
மாபெறும் தலைவர் 'வின்ஸ்டன் சர்ச்சில்' அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, துயர்கொள்ள எனக்கு நேரம் இல்லை என்றார்.இதை கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே வியப்பு!. என்ன இது துயரியில்லாத ஒரு மனிதனா? அல்லது அத் துயரினை தாம் உணர நேரம் இல்லை என்று கூறும் ஒரு மனிதனா? என்று வியந்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் அதற்கு கூறிய விளக்கம், ''நான் நாளும் 18 மணி நேரம் வேலை செய்கிறேன், அதனால் எனக்கு துயர்கொள்வதற்கு நேரம் இல்லை என்று கூறினார். உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மையும் கூட.. கோடி கோடியாக சொத்து இருக்கலாம். பெரிய பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இருக்கலாம்.
திறமையான மருத்துவர்களால வேண்டுமானால் இறப்பினை தள்ளிப் போடலாம். ஆனால்! ஒருநாள் இந்த உயிர் போகத்தான் போகின்றது.அப்போது யாராலும் போகின்ற உயிரை தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் வாழ்க்கையின் நியதி...! இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எதற்கும் துன்புறுவதற்கு அவசியமே இல்லை...!
ஆம் நண்பர்களே...!
எதுவுமே நிலைமாறாது இருக்கின்றபோது, உங்கள் துயரம் மட்டும் எப்படி நிலைமாறும்...?துயரினைக் களையுங்கள், மகிழ்வுடன் எப்போதும் இருங்கள்...!!
-உடுமலை சு தண்டபாணி✒
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu