இன்றைய சிந்தனை. ( 18.04.2022) மௌனம் ஒரு மகத்தான சக்தி..

ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி...!, மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.ஆனால், அதைவிட, ,''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்..."
புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரச குமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன.
ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப்போனான்..காரணம் வாய் எப்போதும் மௌனத்திலேயே இருந்தது. நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப்போனார்கள்.என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா...? என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின..யாராலும் அரச குமாரனைப் பேச வைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்தபடியே அவனது காலத்தைக் கடத்தினான்...
அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தான்.அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர்...
அப்பொழுது இரண்டு குருவிகள் 'கீச்…கீச்…'எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன.பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன...
இதைக்கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள், இளகியது அரசகுமாரனின் மனம். கண்களில் கண்ணீர்த் துளி கள். அந்தப் பறவைகளைப் பார்த்து, 'நீங்கள் ஏன் பேசினீர்கள்?' என்று கேட்டார்...
அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர். மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான்..வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல் அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரச குமாரன்...
மன்னனுக்கு வந்தது கோபம்...! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவிவிடும்படி கட்டளை இட்டார்...அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரச குமாரனை பார்த்து,நீங்கள் பேசியது உண்மை...! இது நமக்கு மட்டும்தான் தெரியும்.
நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால்தான்,எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதையாவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள்... அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன், 'நீங்கள் ஏன் பேசினீர்கள்...?' என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றார்...
கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்...
ஆம் நண்பர்களே...!
பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது..நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது..ஆனால், தினமும் சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்..மௌன மொழி மூலம் நமது சக்தி பெருகும், குடும்பத்திலும் பணிபுரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும்...
-உடுமலை சு தண்டபாணி✒️
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu