டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சியானது எப்படி? டாக்டர் ராமதாஸ் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சியானது எப்படி? டாக்டர் ராமதாஸ் கேள்வி
X

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். (கோப்பு படம்).

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுக்கு தயாராவதற்கான பயிற்சி மையங்கள தமிழகம் முழுவதும் ஏராளமாக உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானம் மூலம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், காரைக்குடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கும் சம்பவம் தேர்வு எழுதியோர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு விவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதி உள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தி இருக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70 சதவீதம் இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் உள்ள மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!