தேர்வு முடிவுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தேர்வு முடிவுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
X
தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நியமனம் செய்து வருகிறது.

அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சியால் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான முடிவு வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இந்த பதவிகளில் முதலில் 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் அதில் சில இடங்கள் சேர்க்கப்பட்டு, சில இடங்களை தவிர்த்து பட்டியல் வெளியானது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பாணையில் 5 ஆயிரத்து 777 இடங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இம்மாதத்துக்குள் வெளியாகிறது.

இதேபோல், 95 குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, குரூப்-1சி சேவைகளில் வரும் 11 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்து தேர்வு, மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு ஆகியவற்றுக்கு அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு உயர்நீதிமன்ற வழக்கால் நிலுவையில் உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!