நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு

நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக அரசுக்கே மீண்டும் அனுப்பினார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆளுங்கட்சியான திமுக நாடாளுமன்றத்தில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கொந்தளித்தது. இதையடுத்து, 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார். மேலும், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை ஆளும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

இந்த நிலையில், மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்க அளிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு