பாம்புகள் பிடிப்பதற்கு இருளர்களுக்கு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

பாம்புகள் பிடிப்பதற்கு இருளர்களுக்கு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
X
இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி அதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது

தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளை பிடிக்கவும், வி‌ஷத்தை விற்பதற்கும் அவர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் தனியாக இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கம் சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் செயல்பட்டு வருகிறது.

இருளர்கள் பாம்புகளை பிடித்து அதில் இருந்து வி‌ஷத்தை எடுத்து ஜாடியில் அடைத்து மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வார்கள். வன உயிரின சட்டப்படி இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அரசு அனுமதி வழங்கும்.

இந்தநிலையில் வனத்துறை அனுமதி வழங்காத காரணத்துக்காக நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போய் இருந்தது. இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது. 2021- 2022-ம் ஆண்டில் மொத்தம் 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்கவும், வி‌ஷத்தை விற்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வி‌ஷ முறிவு மருந்து தயாரிக்க நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக கண்ணாடி விரியன் பாம்பு வி‌ஷம்தான் அதிக விலைக்கு விற்கப்படும். இது ஒரு கிராம் 60 ஆயிரம் ரூபாய்க்கும், அதற்கு அடுத்த படியாக நாகப்பாம்பு வி‌ஷம் 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!