வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து:  தமிழக அரசு மேல்முறையீடு
X
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய அ.தி.மு.க., அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இதற்கான அரசாணையை தி.மு.க., அரசு வெளியிட்டது.

இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், ஜாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்கியதை ஏற்க முடியாது; இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டசபை தேர்தலுக்காக, அவசரமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, கடந்த 1ம் தேதி தீர்ப்பு அளித்தனர். 'இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அளித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலிடப்படாத பிரிவினர் தொடர்பான மக்கள்தொகை கணக்குகள் அடிப்படையிலேயே, வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்கள் இருக்கும் நிலையில், கமிஷனின் ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, இந்த சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்துள்ளது ஏற்புடையதல்ல.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, மக்களின் நலனுக்காக இடஒதுக்கீடு வழங்கி ஆணைகள் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அதற்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் வன்னியருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த அரசாணைக்கு தடை விதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து பாமக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!