Tirupur Knitwear Factories- திருப்பூரில் 30 சதவீத பின்னலாடை தொழிற்சாலைகள் மூடல்; தொழில்துறை கவலை
Tirupur Knitwear Factories- திருப்பூரில் உற்பத்தியின்றி முடங்கி வரும் பின்னலாடை தொழிற்சாலைகள் (கோப்பு படம்)
Tirupur Knitwear Factories, Shutdown- வங்கதேசம் மற்றும் பிற மாநிலங்களின் போட்டிச்சூழல், மின் நிலைக் கட்டணத்தை உயர்த்தி, பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தால், ஜவுளித்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, நஷ்டத்தால் 30 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக திருப்பூர் பின்னலாடை தொழில் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
தமிழகத்தின் ‘பனியன் நகரம்’, ‘டெக்ஸ்டைல் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஈரோடு, கோவை மாவட்டங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரு நிறுவனங்கள் பின்னலாடை தொழிலைச் செய்து வருகின்றன. உள்ளூர் விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என ஆண்டுக்கு, 65 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால் இந்தியாவுக்கான ஆர்டர்கள் அங்கு செல்வதாலும், பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாமலும் வர்த்தகம் கடுமையாகப் பாதித்து, நஷ்டத்தைச் சந்தித்து தொழிற்சாலைகள் பூட்டப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர்.
மேலும், தமிழக அரசு போதிய திட்டங்களை வகுக்காமலும், 430 சதவீதம் மின் நிலைக்கட்டணத்தை உயர்த்தி, நிலையற்ற பருத்தி மற்றும் நூல் விலை பிரச்னைக்கு தீர்வு காணாமல் உள்ளதால், பின்னலாடைத் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டங்களையும் செய்து வருகின்றனர்
திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகள்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TEAMA) தலைவர் முத்துரத்தினம், பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கூறியதாவது,
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மூலம் ஏற்றுமதியில் 35 ஆயிரம் கோடி உள்பட 65 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர், இதில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள்.
தமிழகத்தின் பின்னலாடை தொழிலுக்கு ஆண்டுக்கு 115 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் பருத்தி உற்பத்தி குறைந்து இங்கு 6 லட்சம் பேல் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால், நாம் குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து போக்குவரத்துக்கு அதிக செலவு செய்து பஞ்சு கொள்முதல் செய்கிறோம்.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி துவங்கி தற்போதைய பஞ்சு கொள்முதலுக்கான போக்குவரத்து செலவு, நிலையற்ற மூலப்பொருள் விலை, அரசின் மின் கட்டண உயர்வு என அனைத்துமே திருப்பூர் பின்னலாடை தொழிலை ஆட்டம் காணச் செய்துவிட்டது,’’ என்கிறார் முத்துரத்தினம்.
தமிழக ஜவுளித்துறைக்கு வங்கதேசம் போட்டியாக இருந்த நிலையில், பிற மாநிலங்களும் போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் பரப்பளவு அளவே உள்ள வங்கதேசத்தில், அந்நாட்டு அரசு அதிக சலுகைகளை வழங்குவதால் அங்கு உற்பத்திச் செலவு குறைவு. அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தால் வரி இல்லை என்பதால், நம்மைவிட அங்கு விலை குறைவு என்பதால் உலக நாடுகள் அங்கு வாங்கத் துவங்கியுள்ளதால், உலகின் மொத்த ஏற்றுமதியில் வங்கதேசம் 12 சதவீதமும் இந்தியா 4 சதவீதமாகவும் உள்ளது.
குஜராத் மாநில அரசு ஜவுளித்துறைக்கான மின் கட்டணத்தை 3 ரூபாய் குறைத்துள்ள நிலையில், சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்து ஜவுளித்துறையை அதள பாதாளத்துக்கு தள்ளிவிட்டது. பிகார் அரசைவிட இங்கு ஜவுளித்துறைக்கு ஒரு யூனிட் 6 ரூபாய் அதிகமாக உள்ளது.
குஜராத், பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் அளவுக்கு இங்கு ஜவுளித் தொழிலுக்கான திட்டங்கள் இல்லாததுடன், ஜவுளித் தொழில் மீது மாநில அரசு அக்கறை காட்டாததால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் தயாராகும் பின்னலாடைகளின் விலை ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் வரை அதிகமாக உள்ளதால், நமக்கான ஆர்டர்கள் அவர்களுக்குச் செல்கிறது.
இவ்வாறு முத்துரத்தினம் கூறினார்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIHMA) துணைத்தலைவர் பாலசந்தர் கூறியதாவது,
முன்பு 3 மாதங்களுக்கு ஒருமுறை நூல் கொள்முதல் விலையை நூற்பாலைகள் அறிவித்து வந்த நிலையில் தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை அறிவிக்கத் துவங்கியுள்ளனர். இதனால், முன்பு நூல் விலை கிலோவுக்கு 5 – 10 ரூபாய் மாறுபாடாக இருந்த நிலையில், இன்று 25 சதவீதம் வரையில் விலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால், உள்ளூர் ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்து நிலையற்ற வர்த்தக சூழல் உருவாகியுள்ளது.
இதைச் சரிசெய்ய நூற்பாலை உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கொண்ட கமிட்டியை உருவாக்கி, அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் தமிழக அரசு மின்கட்டண உயர்வு செய்ததில், நிலைக் கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தியுள்ளது. நிலையற்ற மூலப்பொருள் விலை, அதீத மின் கட்டணத்தால் பின்னலாடை தொழில் அதள பாதாளத்துக்குச் சென்றுள்ளது. மின்கட்டண உயர்வுக்குப் பின் மட்டுமே, 5,000 சிறு, குறு நிறுவனங்கள் பூட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு பாலசந்தர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu