நுால் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியில் நீடிக்கும் மந்தநிலை

நுால் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியில் நீடிக்கும் மந்தநிலை
X

திருப்பூரில் இந்த மாத நூல் விலையில், மாற்றமில்லை.

Cotton Thread Price - திருப்பூரில் இந்த மாத நூல் விலையில் மாற்றமில்லை என்று, நூற்பாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், ஆர்டர்கள் இல்லாததால், பனியன் உற்பத்தியில், அதே மந்தமான நிலை நீடிக்கிறது.

Cotton Thread Price -பனியன் தொழிலின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை, இரண்டு ஆண்டுகளாக அபரிமிதமான உயர்ந்ததால், திருப்பூரில் பனியன் தொழில் கடுமையாக முடங்கியது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நூல் விலை குறித்து நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிப்பர். கடந்த ஏப்ரல் ரூ.30, மே மாதம் ரூ.40 என மேலும் நுால் விலை அதிகரித்தது. தொழில்துறையினர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தை மேற்கொண்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர் கோரிக்கை வைத்ததன் விளைவாக ஜூலை மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. ஆகஸ்டு மாத நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது. நூல் விலை குறைந்தாலும் ஆர்டர்கள் இல்லாமல் உற்பத்தி நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று, செப்டம்பர் மாதத்துக்கான நூல் விலை அறிவிக்கப்பட்டது. கடந்த மாத நூல் விலை அப்படியே தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வரி நீங்கலாக கோம்டு ரகம் 20-ம் நம்பர் நூல் கிலோ ரூ.334, 24-ம் நம்பர் நூல் ரூ.342, 30-ம் நம்பர் நூல் ரூ.352, 34-ம் நம்பர் நூல் ரூ.365, 40-ம் நம்பர் நூல் ரூ.385 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் செமி கோம்டு ரக நூல் 20-ம் நம்பர் ரூ.322, 24-ம் நம்பர் நூல் ரூ.332, 30-ம் நம்பர் நூல் ரூ.342, 34-ம் நம்பர் நூல் ரூ.355, 40-ம் நம்பர் நூல் ரூ.375 என அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல் விலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும் ஆர்டர்கள் கை நழுவி சென்று விட்டதால், பனியன் உற்பத்தி திருப்பூரில் வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக செயற்கை இழை ஆடைகள் தயாரிப்பில் உள்நாட்டு பனியன் வர்த்தகர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏழைகளின் ஆடையாக இருந்த பருத்தி ஆடை, தற்போது பணக்காரர்கள் மட்டுமே உடுத்தும் அளவுக்கு நூல் விலை உயர்ந்துள்ளது. செயற்கை இழை ஆடைகள் 40 ஆண்டுகளுக்கு முன் பாலியெஸ்டர் ஆடைகள் விலை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது பாலியெஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை ஆடைகள் விலை குறைந்து சந்தையை ஆக்கிரமித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்பாளர்கள், பிராண்டட் ஆடை தயாரிப்பாளர்கள் செயற்கை இழை ஆடைகளை தயாரித்து வருகிறார்கள். இதே நிலை தொடரும்போது பருத்தி ஆடை உற்பத்தி மெல்ல மெல்ல திருப்பூரில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!