'நம்ம ஊரு ஹீரோ': சாமானியரின் அவலங்களை எழுதி வரும் சுப்ரபாரதிமணியன்!
X
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
By - B.Gowri, Sub-Editor |22 Dec 2021 7:00 PM IST
சாமானியர்களின் துயர், நொய்யலின் நிலை உள்ளிட்ட சமூகம் சார்ந்து எழுதி வருகிறார், முன்னணி எழுத்தாளரான சுப்ரபாரதிமணியன்.
தேனீக்கள் போல உழைக்கக்கூடிய மக்களை கொண்டுள்ள திருப்பூரில், தேனினும் சுவை மிக்க தமிழ் எழுத்துக்களால் இலக்கிய உலகில் அறியப்படுபவர், சுப்ரபாரதிமணியன். பின்னலாடை நகரில் வசிக்கும் சாயம் அப்பிய மனிதர்களின் நிலையை, தனது எழுத்துக்கள் மூலம் படம் பிடித்து காட்டி இருக்கிறார். கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்த பெண்களின் வாழ்க்கையை சொல்லி வருகிறார்.
கடந்த 1955ஆம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி, திருப்பூர் அருகே, செகடந்தாழி கிராமத்தில் பிறந்தவர் சுப்ரபாரதிமணியன். படித்தது, எம்.எஸ்.சி. கணிதம்; பணியில் அமர்ந்தது, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில், கோட்ட பொறியாளராக; ஆனால், சிந்தனை முழுவதும் தமிழைச் சுற்றியும், தமிழர் நிலை பற்றியுமே இருந்தது வந்தது.
கடந்த 1980களில் எழுதத் தொடங்கினார், சுப்ரபாரதிமணியன். இவரது, முதல் சிறுகதை தொகுப்பான 'அப்பா', 1987ம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது தொடங்கிய இவரது தமிழ் எழுத்துப்பணி, சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் தொடர்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக, சுப்ரபாரதிமணியன் பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, "கனவு" என்ற இலக்கிய இதழை, 27 ஆண்டுகளாக, சுப்ரபாரதிமணியன் நடத்தி வருகிறார். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதா விருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர்.
மண்ணையும் மக்களையும் நேசித்து, சமூக இன்னல்களை எழுத்துகளில் வெளிப்படுத்தி வருகிறார், இந்த பின்னல் நகரத்துக்காரர். எழுத்தின் மூலம் சமூகத்தின் அவலத்தை வெளிப்படுத்தி வரும் சுப்ரபாரதி மணியன் அவர்களை, திருப்பூரின் "நம்ம ஊரு ஹீரோ"வாக அழைப்பதில், அறிமுகம் செய்வதில், இன்ஸ்டாநியூஸ் இணையதளம் பெருமிதம் கொள்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu