ஆயத்த ஆடை ஏற்றுமதி ஜனவரிக்கு பிறகு சீராகுமா? - பனியன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

ஆயத்த ஆடை ஏற்றுமதி ஜனவரிக்கு பிறகு சீராகுமா? - பனியன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
X

பனியன் ஏற்றுமதியில் நீடிக்கும் மந்த நிலை, ஜனவரிக்கு பிறகு மாறுமா?

Banian Manufacturers in Tirupur -ஆயத்த ஆடை ஏற்றுதி வர்த்தகம், இந்திய அளவில் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வரும் ஜனவரிக்கு பிறகு இந்நிலை மாறுமா, என்ற எதிர்பார்ப்பில், திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

Banian Manufacturers in Tirupur -பனியன் ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலமாக இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுக்கும் நகரமாக திருப்பூர் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் பனியன் தொழில், கடந்த கால பாதிப்புகளால், முடங்கி போயுள்ளது. நூல் விலை அபரிமிதமான உயர்வு, உக்ரைன்-ரஷ்யா போர், உலகளவில் பொருளாதார மந்தநிலை போன்றவையால், ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதனால், திருப்பூர் பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதத்தை காட்டிலும், நடப்பாண்டு, 2022 செப்டம்பர் மாதம், 18 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஆண்டு 2021அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இந்திய அளவில் பலத்த சரிவை சந்தித்துள்ளது.

ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில், இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 55 சதவீதமாக உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி என்பது, திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் வீழ்ச்சியையும் உள்ளடக்கியதாக உள்ளது. திருப்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.20 ஆயிரத்து 250 கோடிக்கு பனியன் ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.18 ஆயிரத்து 80 கோடியாகும். டாலர் மதிப்பில் 2 ஆயிரத்து 572 பில்லியனாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில், இதே காலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 426 பில்லியன் டாலராக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு, கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டம் அது. அதன்பிறகு, கொரோனா ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய பின்பும், நடப்பாண்டில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது;

நூல் விலை உயர்வு, உக்ரைன்-ரஷ்யா போர், உலகளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாத ஏற்றுமதி என்பது அதற்கு முன்பு 4 மாத ஆர்டர்களை பொறுத்தது. நவம்பர், டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, குறைவாகவே இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடைகள் தயாரிக்க வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. இந்த வர்த்தக விசாரணை ஆர்டராக மாறி ஆடைகளை தயாரித்து அனுப்பும்போது ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க தொடங்கும். ஏ.இ.பி.சி., பியோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய ஆர்டர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பின்னலாடை தொழிலை பாதுகாக்க வசதியாக 'பேக்கிங் கிரெட்டிட்' மீதான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 4 மாதங்களாக, திருப்பூரில் பனியன் ஏற்றுமதி வர்த்தகம் முழு வீச்சில் நடக்கவில்லை. இருக்கிற ஆர்டர்களை மட்டுமே செய்து கொடுத்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு, புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. வரும் ஜனவரிக்கு பிறகு, அவை ஆர்டர்களாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil