அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் ஜோ.நளதம் அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது மாணவர்கள் தெளிவான இலக்கினை வைத்துக்கொண்டு தொடர்ச்சியான உழைப்பை செலுத்த வேண்டும் என்றும், அத்துடன் மாணவர்கள் கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தேர்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அவினாசி, சக்திவேல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சுய தொழில் செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் சுயதொழில் செய்வதற்கான அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும் பேசினார்.
மேலும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிந்தித்து நமக்கான கம்போர்ட் சோனை (Comfort zone) விட்டு வெளியே நகராமலும் இருந்தால், புதிய சவால்கள் புதிய திருப்பங்களை சந்திக்கும் வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமலேயே போய்விடும் என்றும் ,தன்னுடைய தொழிலில் ஏற்பட்ட சவால்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்றும் மூலதனம் திரட்டுதல், சரியான மூலப் பொருட்களை தேர்ந்தெடுத்துதல், சரியான மனித வளங்களையும்,சமகால நவீன தொழில்நுட்பங்களையும் அறிந்திருந்தால், அனைவரும் தொழில் முனைவராகி சாதனை படைக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய சக்திவேல், அத்துடன் அவர் விளையாட்டின் அவசியம் பற்றியும் அதன் மூலம் கிடைக்கும் உடல் புத்துணர்ச்சி மற்றும் அரசு வேலைகளிலும், மேற்படிப்பிலும் முன்னுரிமை இருப்பதையும் நாம் சரியாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தினார். இதுபோன்ற முன்னுரிமைகளை சரியான வண்ணம் பயன்படுத்தி அரசு அதிகாரங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை புரியலாம் என்றார்.
அனைவருக்கும் நன்றி கூறிய சர்வதேச வணிகம் துறை தலைவர் முனைவர்.பாலமுருகன் அரசு கல்லூரியின் கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த இப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் முன்வரும் பட்சத்தில், இன்னும் நிறைய மாணவ மாணவியர் பயனடைவர் என்றும் இப்பகுதிக்கு மேலும் பல பெருமைகளை சேர்ப்பர் என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அவரது சக்திவேல் குழுமம் சார்பில் 30 விளையாட்டு ( கபாடி, டீக்வாண்டோ, தடகளம்) வீரர்களுக்கு கல்லூரியில் பெயர் பொறித்த பிரத்யேக ஏற்றுமதி ரக விளையாட்டு சீருடைகளை சக்திவேல் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்வில் ஏற்கெனவே கல்லூரியில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் மாணவர்கள், தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu