விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
X

Tirupur News- தடையின்றி மின்சாரம் வழங்க, விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News- விவசாயத்துக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் பகுதியில் விவசாயத்துக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் காளிமுத்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,

தாராபுரம் மின்பகிா்மான வடத்துக்குள்பட்ட தாராபுரம் வடக்கு, சூரியநல்லூா், குண்டடம் தெற்கு, தாராபுரம் புகா் பகுதிகளில் காலை நேரங்களில் தொடா் மின் வெட்டு ஏற்படுவதுடன், மிகக் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக வடுகபாளையத்தில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் எஸ்எஸ் 3 மின்மாற்றி மற்றும் அதற்கு அடுத்தபடியாக 63 கேவி மின் மாற்றிகளுக்கு கம்பி வடங்கள் சிறியதாக உள்ளதால் மின்மாற்றிகளுக்கு போதிய அளவு மின்சாரம் வருவது இல்லை.

இதனால், மின் மாற்றிகளில் இருந்து விவசாயத் தோட்டங்களுக்கு குறைவான அழுத்த மின்சாரமே வருவதால் மின் மோட்டாா்களை இயக்க முடிவதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி மின்மாற்றிகளுக்கு வரும் கம்பி வடங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும்.

மேலும், விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பாறு அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்:

அவா்கள் அளித்த மற்றொரு மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணையின் இடது கால்வாயின் கடைமடைப் பகுதியின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் புதா்போல வளா்ந்து கால்வாயை சேதப்படுத்தியுள்ளன. இந்த மரங்களை அகற்ற கண்ணாங்கோவில் ஊராட்சித் தலைவா் முன்வருகிறாா். ஆகவே, பொதுப் பணித் துறை அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், உப்பாறு அணையின் இடது, வலது கால்வாய்களின் ஒரு சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து 144 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,

திருப்பூா் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மில்லி மீட்டராகும். இதில், நிகழாண்டு அக்டோபா் வரையில் சாராசரியாகப் பெய்ய வேண்டிய மழை அளவு 451.60 மில்லி மீட்டராகும். ஆனால், தற்போது வரை 342.66 மி.மீ. மழை பெய்துள்ளது.

பயிா் சாகுபடிக்குத் தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன. அதன்படி நெல் 41.39 மெட்ரிக் டன், சிறுதானிய பயறுகள் 15.25 மெட்ரிக் டன், எண்ணெய் வித்து பயறு விதைகள் 1,770 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா 1,642 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,160 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,765 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 612 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது, என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மாரியப்பன், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளாா் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியா்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Tags

Next Story