தொய்வில்லா தொழில் வாய்ப்பு: முன்னேற்ற பாதையில் உடுமலை
காற்றாலை உற்பத்தியில் கோலோச்சும் உடுமலை
உடுமலையில், தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், தீபாவளிக்கு பின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அமராவதி அணை, திருமூர்த்தி அணை இதுதவிர, ஆண்டு முழுக்க நிரம்பும் நீராதாரங்கள்; இவைதான், திருப்பூர் மாவட்டம், உடுமலையின் பிரதான அடையாளங்கள். நீர்வளம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மாவட்டத்தின் பிரதான வளர்ச்சிக்கும், இவை பிரதான பங்காற்றுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நுாற்றுக்கணக்கான நூற்பாலைகள், காகித ஆலைகள், கோழிப்பண்ணைகள், பின்னலாடை தொழிற்சாலைகள், காயர் தொழிற்சாலைகள் உட்பட, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயமும், மேலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் செழித்தோங்க காரணமாக உள்ளன.
குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், தென்னை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. வெண்பட்டு உற்பத்தியில், உடுமலை வட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி, வாழ்வாதாரமாக விளங்கி கொண்டிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, காற்றுக்கு பஞ்சமில்லாத சூழலில், உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள, 5,000க்கும் அதிகமான காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற முக்கியப் பங்காற்றி வருகிறது.
தொழில் வாய்ப்பு, வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உடுமலை வட்டத்தில் நிரம்ப உள்ளதால், பின்னலாடை தொழிற்சாலைகளும் புதிது, புதிதாக நிறுவப்பட்டு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
சுற்றுலா சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்த அமராவதி அணைப்பகுதி, திருமூர்த்தி மலை, சின்னாறு வனப்பகுதி போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அமராவதியில் அமைந்துள்ள ஆசிய அளவில் பிரபலமான முதலை பண்ணைக்கு, தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆக, பல்வேறு தொழில் வாய்ப்புகளை தன்னகத்தே கொண்ட உடுமலையில் தீபாவாளி பண்டிகை களைகட்டியது. தீபாவளிக்கு பின், இத்தொழில் சார்ந்த விஷயங்களில் தொடர்புடையவர்கள், அந்த தொழில்களின் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இடையூறு அகன்று, தொழில் வளம் பெருக, இந்நன்னாளில் நாமும் வாழ்த்துவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu