தக்காளி விலை கிலோ ரூ. 3க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை

தக்காளி விலை கிலோ ரூ. 3க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை
X

tirupur News, tirupur News today- தக்காளி விலை சரிவால், விவசாயிகள் வேதனை. (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- உடுமலை பகுதியில், ஒரு கிலோ தக்காளி ரூ. 3-க்கு விற்பனையாவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

tirupur News, tirupur News today- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக, உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி என்பது பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுவதும், விலை உயர்வு ஏற்படும் காலங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

உடுமலை பகுதியில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சமீப காலங்களாக ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. விலை சரிவால் ஏற்பட்ட வேதனையின் உச்சத்தில் விவசாயிகள் தக்காளியை சாலை ஓரம் வீசுவதும், தக்காளி செடிகளுடன் டிராக்டர் விட்டு அழிப்பதும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. அதேநிலை தற்போதும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே ஏற்பட்டு வருகிறது.உடுமலை சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 40 முதல் ரூ. 80 வரை விற்பனையாகிறது.அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ. 3 முதல் ரூ. 5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது. இது பறிப்புக்கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுப்படி ஆகாத விலையாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு மாற்றுத் தொழில் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆனால், திருப்பூர் போன்ற பகுதிகளில் தக்காளி விலை, இன்னும் கிலோ ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில தரப்பு வியாபாரிகள் மட்டும் குறைந்த விலைக்கு, தக்காளிகளை மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றனர். ஆனால், தக்காளிகளை உற்பத்தி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பலத்த நஷ்டமடைகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture