ஆனைமலையில் யானைகளால் மக்கள் அச்சம்; பாதுகாப்பு நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரம்
tirupur News, tirupur News today- ஆனைமலை பகுதியில், யானைகளால், மக்கள் அச்சம். (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா என்பவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானை ஒன்று திடீரென வெளிப்பட்டது. இதனால் அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.
அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்கள் சென்று வரும் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்கம்பங்களினால் யானைகள் இறப்பதை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை தாலூகாவில், வேட்டைக்காரன்புதுார், அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, காளியாபுரம், கோட்டூர், பெரியபோது ஆகிய கிராமங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் வட்ட நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வனவர் மற்றும் வனக்காப்பாளர், போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.
இதில் அதிகாரிகள் கூறியதாவது,
ஆனைமலை தாலூகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வனங்களில் இருந்து, ஐந்து கி.மீ., வரையுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் மின்கம்பங்களின் அச்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கண்டறியப்பட வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள், உயரம் குறைவாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் வனங்களுக்குள் செல்லும் மின்கம்பங்கள் என வகைப்பாடு செய்து சம்பந்தப்பட்ட புலப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டும். கண்டறியப்பட்ட மின்கம்பங்களை மின்வாரியத்தின் வாயிலாக அவற்றின் தன்மைக்கேற்ப அகற்ற அல்லது மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனப்பகுதிக்குள் செல்லும் மின்கம்பிகளை உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மின்கம்பங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தல், முள்வேலி அமைத்தல் போன்ற பணிகள் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மின்கம்பிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயர்ரக காப்பு கம்பிகள் மற்றும் உரையிடப்பட்ட கம்பிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மின்கம்பங்களினால் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பதிலாக மாற்று வழிமுறை அல்லது மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் வட்ட அளவில் தாசில்தார்களும், குறு வட்ட அளவில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலும் பணிகளை ஒருவாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடித்ததை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி செய்து கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu