மக்களின் கோரிக்கைகளை, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை; விவசாயிகள் குற்றச்சாட்டு
Tirupur News. Tirupur News Today- உடுமலை உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.
Tirupur News. Tirupur News Today- உடுமலையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது,
திருமூர்த்தி அணை கட்டப்பட்ட போது பல்வேறு விவசாயிகள் நிலத்தை தானமாக வழங்கினர். இதனால் பாசனத்திற்கு தண்ணீரும், குடிப்பதற்கு குடிநீரும் தடையில்லாமல் பெற்று வருகிறோம். ஆனால், திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. அதை தவிர்க்க வேண்டும். பொதுநல நோக்கோடு வழங்கப்பட்ட அந்த நிலங்களை அணைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், பி.ஏ.பி. கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது திருட்டு நடப்பது தொடர்கதையாக உள்ளது. அதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிப்படைகின்றனர். உடுமலைப் பகுதியில் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதில்லை. உழவர் சந்தையில் இடம் பற்றாக்குறை காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
மேலும். தினசரி சந்தையை மேம்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் தரும் புகார் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை.
தளி பேரூராட்சி பகுதியில் அதிகளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டு உள்ளது. முறையான அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட கிராவல் மண் சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஏழை எளிய மக்கள் மண் எடுப்பதற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.
அமராவதி சர்க்கரை ஆலையில் இளம் சூடு ஏற்றுதல் தாமதமாக நடைபெறுகிறது. கரும்பு அறுவடைக்கு முன்பே பணியை முடித்திருக்க வேண்டும். நடவடிக்கை தாமதம் ஆவதால் கரும்பின் எடை குறைந்து விவசாயிக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே கரும்பு அறவையை சர்க்கரை ஆலையில் விரைந்து தொடங்க வேண்டும். வண்டல் மண் நீராதாரங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. இதனால் மழை காலத்துக்குள் நீராதாரங்கள் ஆழப்படுத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது.
மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடுமலை பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நிலவும் குளறுபடிகளால் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இணைந்த ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்த சேவையை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் நில அளவை பிரிவில் அளிக்கின்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது. அதற்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் பொன்னாலம்மன் சோலை பகுதியில் இருந்து குழிப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.அதை மீட்டு மலைவாழ் மக்கள் சமதள பகுதிக்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ. உதவியாளர் ஜலஜா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu