வீடு புகுந்து மிரட்டி திருடிய கொள்ளையனை சண்டையிட்டு பிடித்த பாஜக பிரமுகர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வேலன் நகரைச்சேர்ந்தவர் தண்டபாணி (77). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி கஸ்தூரி (71). தண்டபாணி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உடுமலை மருத்துவமனைக்கு சென்றிருந்தார். வீட்டில் கஸ்தூரி மற்றும் வேலைக்கார பெண் செல்லம்மாள் (33) ஆகியோர் இருந்தனர். வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை, கஸ்தூரி திறந்து வெளியில் வந்தார். வெளியில் நின்றிருந்த வாலிபர் கொரியர் வந்திருப்பதாக ஒரு தபாலை காண்பித்தார். பிறகு, குடிக்க தண்ணீர் கேட்டார். இதனால் வீட்டிற்குள் தண்ணீர் எடுத்து வர கஸ்தூரி சென்றார். பின்னால் சென்ற அந்த வாலிபர் கஸ்தூரியின் கழுத்தில் கத்தியை வைத்து, நகையை கழற்றி கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன் என மிரட்டினார்.
பயந்த கஸ்தூரி தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளார். வீட்டிற்குள் நின்றிருந்த செல்லம்மாளிடமும் அந்த வாலிபர் நகை கேட்டார். அவரிடம் நகை இல்லை. அந்த சமயத்தில் இருவரும் சத்தம்போட்டனர்.
அருகில் குடியிருருக்கும் பாஜ மாவட்ட பிரசார அணி தலைவர் சின்ராஜ் (61), சத்தத்தை கேட்டு ஓடிவந்தார். அவர் கொள்ளையனை பிடித்த போது, இரும்பு கம்பியால் சின்ராஜை கொள்ளையன் தாக்கினார். இருந்தாலும் விடாமல் அவர் போராடினார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்து விட்டனர்.
வாலிபரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர். வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட சங்கிலி, மோதிரம், வளையல்கள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. காயமடைந்த சின்ராஜ் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கஸ்தூரி, உடுமலை போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த வாலிபரும் காயமடைந்ததால், அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட வாலிபர் உதயக்குமார் (33) என்பதும், எம்.பி.ஏ.பட்டதாரியான அவர், கட்டிட காண்டிராக்டராக வேலை போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu