உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் மறு நடவு செய்ய மானியம்

உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் மறு நடவு செய்ய மானியம்
X

 உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் மறு நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் மறு நடவு செய்ய மானியம் வழங்கப்படும் என, வேளாண்துறை தெரிவித்துள்ளது.

உடுமலை வட்டாரத்தில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட, மகசூல் குறைந்த மரங்களை அகற்றி விட்டு புதிதாக நடவு செய்யப்படுகிறது. அவ்வாறு மறுநடவு செய்வதற்கு வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது;

தென்னை சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் தென்னையில் மறு நடவு மற்றும் புத்துயிரூட்டல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்படி நோய் தாக்குதல், அதிக வயதாகி மகசூல் குறைந்த மரங்கள், பல்வேறு காரணங்களால் வலுவிழந்த மரங்கள் போன்றவற்றை அகற்றி விட்டு, புதிய மரங்கள் நடவு செய்யலாம்.

இதற்கென ஒரு தென்னை மரத்தை அகற்றுவதற்கு ரூ. 1000 நிதி வழங்கப்படுகிறது. மேலும் மறு நடவு செய்வதற்கு வீரிய ஒட்டு குட்டை ரக தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு ஒரு கன்றுக்கு ரூ 40 வழங்கப்படுகிறது.அத்துடன் அதே தென்னந்தோப்பிலுள்ள மற்ற தென்னை மரங்களை ஆரோக்கியமானதாக உருவாக்குவதுடன் சிறந்த காய்ப்புத் திறன் கொண்டதாக மாற்றும் வகையில் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மை முறை மூலம் செறிவூட்டுவதற்கு 2.47 ஏக்கருக்கு (1 எக்டேர்) ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரத்து 750 வழங்கப்படுகிறது.இவ்வாறு தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் என மொத்தம் ரூ. 17 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story