உடுமலையில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு
உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை, மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே, மாணவர்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து, மண்டலம் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கானப் பணியில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, உடுமலை கல்வி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தலைமையிலான குழுவினர், பூலாங்கிணறு அரசு துவக்கப்பள்ளி, துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, பழநிப்பாதை நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினர்
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆய்வின் போது, குழந்தைகள் எந்த வகுப்பிலும் தேக்கமின்றி தொடர்ந்து படிக்கவும், ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறவும் செய்ய வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மீது, முழு கவனம் செலுத்த வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், மாணவர்களுக்கு அரசால் அளிக்கப்படும் இலவச சலுகைகளை பெற்றுத்தர வேண்டும். இலவச பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ் போன்றவற்றை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர் வருகைப்பதிவேட்டை மிக சரியாக பராமரிக்க வேண்டும். வகுப்பறை, கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழல் உள்ளதாக அமைய வேண்டும்.விடுப்பு, பிற பணி போன்றவற்றை உரிய நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu