உடுமலை ஊராட்சிகளில் திடக்கழிவு திட்டம் முடக்கம்
Tirupur News- பயன்பாடின்றி காட்சியளிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பகுதிகள்
Tirupur News,Tirupur News Today- உடுமலை ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் பயன்படுத்தாமல் வீணாகிறது.
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் வகையில், மக்கள் தொகை மற்றும் வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில், துாய்மைப்பணியாளர்கள், வாகனங்கள் வழங்கப்பட்டன.
வீடுகள் தோறும், மக்கும், மக்காத குப்பையை சேகரித்து, உரக்குடில்களில் இயற்கை உரம் தயாரிக்கவும், அவற்றை விவசாயிகளுக்கு வழங்கி, ஊராட்சிகளின் வருவாய் பெருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம், வேலை உறுதியளிப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ், ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் செலவில், உரக்குடில்கள் அமைக்கப்பட்டன.
ஒரு சில மாதங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், அதிகாரிகள் அலட்சியம், உரிய நிதி ஒதுக்கீடு இல்லாதது, முறையான தொழில் நுட்பம், துாய்மை பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளது.
ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட துாய்மைப்பணியாளர்கள், பெயரளவிற்கு வீடுகளில் குப்பை சேகரிக்கின்றனர். சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக மாற்றப்படாமல், பொது இடங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
பெரும்பாலான ஊராட்சிகளில், குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படாமல், பொது இடங்கள், ரோடுகளில் குவிந்து கிடக்கிறது. குளம், குட்டை உள்ளிட்ட ஓடைகளில், கொட்டப்பட்டு, நீர் நிலைகளும் சீரழிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும், உரக்குடில்கள், குப்பை உரமாக்கும் தொட்டிகளும் வீணாகி வருகிறது. பல ஊராட்சிகளில், சிதிலமடைந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
மேலும், தள்ளுவண்டிகள், வாகனங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
குப்பை, கழிவுகளால் நீர்நிலைகள் சீரழிக்கப்படுகிறது. பி.ஏ.பி., கால்வாய், குளங்களில் கொட்டப்படும், குப்பை மற்றும் கழிவுகளால், விவசாயிகளும் பாதிக்கின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், இதே நிலை தொடர்கிறது.
எனவே, ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், உரிய நிதி ஒதுக்கீடு, துாய்மை பணியாளர்கள் நியமனம், தொழில்நுட்ப உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu