உடுமலையில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை; பொதுமக்கள் ஆவேசம்

உடுமலையில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை; பொதுமக்கள் ஆவேசம்
X

Tirupur News,Tirupur News Today- உடுமலையில், டிஎஸ்பி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Tirupur News,Tirupur News Today-உடுமலை அருகே கோவில் விழாவில் நடந்த தகராறில், ஒரு தரப்பினரை மட்டும் போலீஸ் கைது செய்ததை கண்டித்து, டிஎஸ்பி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் விழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை மட்டும் போலீஸ் கைது செய்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் நேற்று உடுமலை போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உடுமலையை அடுத்த தும்பலப்பட்டியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவின் போது கடந்த 2-ம் தேதி நடந்த அன்னதானத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தும்பலபட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு இடையே அடிதடி மற்றும் கத்திக்குத்து நடந்துள்ளது. இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன், கவிபிரகாஷ், கவின்குமார், விஷ்ணு, ராஜேந்திரன் உள்ளிட்ட இரு தரப்பினரும் உடுமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக முருகேஷ் (37), கோபால் (39), சந்தோஷ் (18), கார்த்தி (27), பிரவீன் (16), ரஞ்சித் குமார் (26), பிரேம் குமார் (26) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல் விஷ்ணு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை. இதனால் போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி, விஷ்ணு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று உடுமலை போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரியும் கோஷம் எழுப்பினா். அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது விஷ்ணு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப் போவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், 2 மணி நேரம் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!