காகித தொழிற்சாலையால் மாசு? சர்ச்சைக்கு தீர்வு காணுமா அரசு
பைல் படம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரம் பள்ளபாளையம் கிராமத்தில், கடந்த 9 ஆண்டுகளாக அமாரவதி பேப்பர் மில் இயங்கி வருகிறது. பல்வேறு ஊர்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்து இங்கு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் கழிவுநீரால் இங்குள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,''இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. சுற்றிலும் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் இயங்கும் இந்த ஆலையால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் துர்நாற்றத்தால், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ தகுதியற்ற நிலை காணப்படுகிறது. மாடுகள், ஆடுகள் மற்றும் குதிரைகள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கின்றன'' என்றனர்.
இப்பகுதி மக்களும், விவசாயிகளும் இந்த ஆலையை மூட வேண்டும் என, பல ஆண்டுகளாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசாங்கத்திடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.இதற்கிடையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், பல்லடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கடந்த, 9ம் தேதி அன்று முற்றுகையிட்டு, தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் நேரில் தலையிட்டு, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வலியுறுத்தி, வரும், 25ம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இயக்கத்தின் மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, பிரசார குழு மணி, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநகர தலைவர் கோகுல் ரவி, ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பல்லடம் வேலுமணி, சூலூர் கணேசன், மயில்சாமி,தெக்கலூர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் விவசாயிகள் பங்கேற்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் இதை ஒருங்கிணைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu