திருமூர்த்தி மலையில், ஆடிப்பெருக்கு விழா நடத்த மக்கள் கோரிக்கை
Tirupur News,Tirupur News Today- திருமூர்த்தி மலை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, திருமூர்த்திமலையில் இன்று, மக்கள் குவிந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் அமைந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் மும்மூர்த்திகளை சுவாமி தரிசனம் செய்வதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
திருமூர்த்தி மலையில் ஆண்டுதோறும் நடந்து வந்த ஆடிப்பெருக்கு விழா கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த ஆண்டில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா, என்று எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருமூர்த்தி மலையில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கிருந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்ற மக்கள், அங்கு அருவில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் அங்கிருந்து அமணலிங்கேசுவரர் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பஞ்சலிங்க அருவி மற்றும் அணைப்பகுதியில், மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடிப்பெருக்கு விழாவை எதிர்நோக்கி வருகை தந்திருந்த வெளிமாவட்ட பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் ஆடி மாதம் முடிவதற்குள் திருமூர்த்தி மலையில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu