தென்னையில் இயற்கை விவசாயம்

தென்னையில் இயற்கை விவசாயம்
X

இயற்கை முறையில் தென்னை நடவு. மாதிரி படம்.

உடுமலை பகுதியில், இயற்கை வழியில் தென்னை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. அதிலும், இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் குழுவினர், உடுமலையிலுள்ள அங்ககப்பண்ணையை ஆய்வு செய்தனர்.

உதவி இயக்குனர் கூறியதாவது :

திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை வழி விவசாயம் மேற்கொள்ள, அங்கக சான்றுத்துறைக்கு அதிகளவு விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். உடுமலை வட்டாரத்தில், தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்வதற்கு அருமையாக சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. அதோடு, கோகோ, சாக்லேட் தயாரிப்புக்கு மூலப்பொருளாக உள்ளதால், தேவையும், சந்தை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

எனவே, விவசாயிகள் கோகோ சாகுபடி மேற்கொள்ள முன் வர வேண்டும். இப்பயிர் நடவு செய்த, 3 ஆண்டிலிருந்து, 40 ஆண்டு வரை, மகசூல் கொடுக்கும். தென்னையில் ஊடுபயிராக, ஏக்கருக்கு, 200 கோகோ செடிகள் நடவு செய்யலாம். முதல் ஆண்டில், மரத்திற்கு, ஒரு கிலோவும், அடுத்தடுத்த ஆண்டுகளில், 2 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

அங்ககச்சான்று பெற விரும்பும் விவசாயிகள், அதற்கான விண்ணப்பம், பண்ணையின்பொது விபர குறிப்பு, வரைபடம், ஆண்டு பயிர்த்திட்டம் உள்ளிட்ட ஆவணங்களுடன், சிறு, குறு விவசாயிகள், 2,700 ரூபாயும், பிற விவசாயிகள், 3,200 ரூபாயும் பதிவு கட்டணம் வங்கி வரைவோலை வாயிலாக, உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு வட்டார விதைச்சான்று அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Tags

Next Story