அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ரூ. 10 கோடி செலவில் இயந்திரங்கள் புதுப்பிப்பு
சர்க்கரை ஆலையில், ரூ. 10 கோடி செலவில், இயந்திரங்கள் புதுப்பிப்பு. (கோப்பு படம்)
உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழநி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலை அங்கத்தினர்களாக உள்ள 3 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து, ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காதது, வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், அரவைக்குத்தேவையான கரும்பு கிடைப்பதிலும் பழமையான எந்திரங்களால் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 94 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு 88 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. சர்க்கரை கட்டுமானம் எனப்படும் கரும்பு பிழிதிறன், கடந்த 5 ஆண்டுகளாக 7.8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.
சர்க்கரை ஆலையில் உள்ள பழமையான எந்திரங்களால், ஆலை இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. நடப்பாண்டு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை கிரேன் வாயிலாக கரும்பு அரவைக்கு எடுக்கப்பட்டு வந்த நிலையில் 2 கோடி ரூபாய் செலவில் நவீன முறையான ரோப் வாயிலாக வாகனங்களிலிருந்து கரும்பு அரவைக்கு எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல் அரவை முதல் சர்க்கரை உற்பத்தி வரை உள்ள எந்திரங்கள் 10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆலை நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் சர்க்கரை ஆலையில் பிழிதிறன் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2ஆண்டாக பெய்த பருவ மழைகள் காரணமாக ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கரும்பும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. நடப்பாண்டு இதுவரை 2,300 ஏக்கர் கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலை அரவைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கரும்பு ஒப்பந்த பணிகள் நடப்பதோடு, விவசாயிகள் நேரடியாக அரவைக்கு வழங்கும் வாய்ப்புள்ளதால் ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு அரவை செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டு மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு 2,755 ரூபாய் நிர்ணயித்துள்ளது. மாநில அரசு ஊக்கத்தொகை 200 ரூபாய் வழங்குகிறது. பிழிதிறன் அதிகரிக்கும் போது, மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு நிதியின் கீழ் ஊக்கத்தொகை 300 ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்ஸி ராஜ்குமார் கூறியதாவது,
ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை, ஏப்ரல் 2வது வாரம் இறுதியில் துவங்கும் வாய்ப்புள்ளது. இதுவரை 2,300 ஏக்கர் கரும்பு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இது 3 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் 1.10 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை கரும்பு அரவை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆலையில் 10 கோடி ரூபாய் செலவில் எந்திரங்கள் நவீனப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நடப்பாண்டு சர்க்கரை கட்டுமானமும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu