திருப்பூர்; உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து
Tirupur News- உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
Tirupur News,Tirupur News Today-உடுமலை அருகே உள்ள முக்கோணம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், பூலாங்கிணறு அருகே முக்கோணம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வரும் இந்த நூற்பாலையில் உள்ள நூல் கிடங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமாா் 9 மணி அளவில் திடீரென தீப் பிடித்தது. தகவல் அறிந்ததும் உடுமலையில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமையில் சென்ற வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், நான்கு பக்கமும் அடைக்கப்பட்டிருந்த நூல் கிடங்கில் தீ மளமளவென பரவி எரிந்து கொண்டிருந்தது. இதனால் பொள்ளாச்சியில் இருந்தும் தீயணைப்புத் துறை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். மேலும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாலை 4 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல், இயந்திரங்கள் சேதமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்தால் பல கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தும், பல மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராட்டமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் கூறியதாவது:
சுமாா் 6 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அந்தக் கிடங்கில் பாலியெஸ்டா் நூல் பேல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை எளிதில் தீப்பற்றும் என்பதால் தீயை அணைப்பது பெரிய சவாலாக இருந்தது. முதல் கட்ட விசாரணையில் மின்சாரக் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது, என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu