அமராவதி, கல்லாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
Tirupur News- கல்லாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் இரு சீசன்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட கல்லாபுரம் பகுதியில் மட்டும் சராசரியாக 450 ெஹக்டேர் வரை ஒவ்வொரு சீசனிலும் நெல் சாகுபடியாகிறது. அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு, பருவமழை உள்ளிட்ட காரணங்களால் மாறுபட்ட சீசன்களில் நெல் நடவு செய்யப்படுகிறது.இப்பகுதியில் 90 நாட்கள் வயதுடைய சன்ன மற்றும் குண்டு ரக நெல் அதிக அளவு நடவு செய்யப்படுகிறது.
இந்தாண்டு மழைப்பொழிவு குறைவு, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பயிரின் வளர்ச்சித்தருணத்தில், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. மேலும் சாகுபடி செலவும் கூடுதலானது.தற்போது கல்லாபுரம் சுற்றுப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பணிகள் முழுவதும் எந்திரங்கள் வாயிலாகவே மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் அறுவடை சீசனில் இடைத்தரகர்களால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை தவிர்க்க அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கல்லாபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அமராவதி விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கொள்முதல் மையம் அமைக்காவிட்டால், விவசாயிகள் பல கி.மீ.,தூரம் அதிக போக்குவரத்து செலவை ஏற்று, நெல்லை விற்பனைக்காக பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.இருப்பினும் போதிய விலை கிடைக்காததால் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
அமராவதி ஆயக்கட்டு, அறுவடை சீசன்களில், நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக கல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கொள்முதல் மையம் துவக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள், நெல்லை விற்பனைக்காக, பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அரசு கொள்முதல் மையங்களில் நெல்லின் ஈரப்பதம், பரிசோதித்த பிறகே கொள்முதல் செய்கின்றனர். ஆனால் அறுவடைக்குப்பிறகு நெல்லை காய வைக்க கல்லாபுரம் பகுதியில் உலர்கள வசதியில்லை. இதனால் குறைவான விலை கிடைத்தாலும் பரவாயில்லை என இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்கிறோம்.நீண்ட காலமாக உலர்களம் மற்றும் தற்காலிக கொள்முதல் மையம் அமைக்கும் கோரிக்கையை தெரிவித்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.
நெல் சாகுபடியாளர்களுக்கு வைக்கோல் விற்பனையிலும் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு முன்பு கால்நடைத்துறை வாயிலாக உலர் தீவன கிடங்கு திட்டத்தை செயல்படுத்தி வந்தது. நெல் சாகுபடி அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோலை கொள்முதல் செய்து கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள பகுதிகளில் மானிய விலையில் விற்பனை செய்தனர்.
இத்திட்டத்துக்கு கால்நடை வளர்ப்போரிடையே அதிக வரவேற்பும் இருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் கல்லாபுரம் பகுதியில் வைக்கோல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu