அமராவதி அணையில் முழு கொள்ளளவு நீடிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையில், முழு கொள்ளளவில் நீர்மட்டம் நீடித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகிற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. இந்த அணையில் இருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து, முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணை நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
அணைக்கு கூடுதலாக நீர்வரத்து ஏற்பட்டால் உபரிநீர் திறப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும். அணை முழு கொள்ளளவில் நீடித்து வருவதுடன் எந்நேரமும் உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.26 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு2 ஆயிரத்து 56 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 177 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu