நகராட்சிக்கு ரூ.1 கோடி நிலுவை: உடுமலை டெப்போவுக்கு குடிநீர் 'கட்'

நகராட்சிக்கு ரூ.1 கோடி நிலுவை: உடுமலை டெப்போவுக்கு குடிநீர் கட்
X

கோப்பு படம் 

உடுமலை அரசு போக்குவரத்துக்கழக கிளை, ஒரு கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவை வைத்துள்ளதால், நகராட்சி அதிகாரிகள் நேற்று குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றனர்; தொழிலாளர்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பினர்.

உடுமலை, பைபாஸ் ரோட்டில், அரசு போக்குவரத்துக்கழக, கிளை அலுவலகம் மற்றும் பணிமனை உள்ளது. அரசு போக்குவரத்து கழக, உடுமலை கிளையில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து, போக்குவரத்து கழகம் சார்பில், ஆண்டு தோறும் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஏறத்தாழ, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வசூலிக்கும் அதிகாரிகள், நகராட்சியில் அதனை செலுத்தவில்லை. இவ்வாறு, தொழில் வரி நிலுவை மட்டும், 90 லட்சம் ரூபாய் உள்ளது.

அதே போல், சொத்து வரி, 2010–-11 ம் நிதியாண்டு முதல், நகராட்சிக்கு செலுத்தாமல், 18 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. மேலும், குடிநீர் இணைப்பு கட்டணம், 19 ஆயிரத்து, 146 ரூபாய் செலுத்தவில்லை. இவ்வாறு, அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகத்திலிருந்து மட்டும், நகராட்சிக்கு வர வேண்டிய, ஒரு கோடியே, 27 லட்சத்து, 146 ரூபாய் நிலுவை உள்ளது.

இதனை செலுத்த வேண்டும் என, பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டும், வரி செலுத்தாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர். நிலுவைத்தொகையை வசூலிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து, வருவாய் ஆய்வாளர்கள் சக்திவேல், கலீல் ரகுமான் மற்றும் அதிகாரிகள் நேற்று, அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கச் சென்றனர்.

அதற்கு, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில், நேற்று ஒரு நாள் மட்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, குடிநீர் இணைப்பை துண்டிக்காமல் அதிகாரிகள் திரும்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!