உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு வழிகாட்டுதலில் திருத்தம்
சித்தரிப்பு படம்.
அரசுப்பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச்செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்படுகிறது. இதில், பெற்றோர்கள், முதன்மை நிர்வாக அலகாகவும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டும் அங்கத்தினர்களாகவும் செயல்படுகின்றனர்.
அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு, மறு கட்டமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெற்றோர் கூட்டம் நடத்தி, பள்ளி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவம் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 20 உறுப்பினர்களில், ஒரு ஆசிரியர் ஏற்கனவே உறுப்பினராக தேர்வு செய்யப் படுவார்.இதேபோல், தலைவர், துணைத்தலைவர், ஒரு கல்வியாளர், ஒரு சுய உதவிக்குழு, இரு மக்கள் பிரதி நிதிகள், 12 உறுப்பினர்கள் என, 18 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில், மேலாண்மைக்குழு, மறு கட்டமைப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: உறுப்பினர்களின் தேர்வில், கல்வியாளர், புரவலர், தன்னார்வ அமைப்பினர், ஓய்வுபெற்ற அலுவலர் என, எவரேனும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, புரவலர் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உறுப்பினர்கள், பள்ளி அமைந்துள்ள குடியிருப்பில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் என, இருந்தது. அதற்கு மாறாக, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்படுபவர், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் தேர்வு செய்யப்படுவர். மேலும், நகர்ப்புறங்களில், ஒரு வார்டு எல்லைக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்கும். எனவே, அங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதி, ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் மேலாண்மை குழுவில் இடம்பெற முடியும் என, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu