மக்கள் நீதிமன்றத்தில் 245 வழக்குகளில் ரூ.3.10 கோடிக்கு சமரச தீர்வு
உடுமலையில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற அமர்வுகளில், 245 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 37ஆயிரத்து 676-க்கு தீர்வு காணப்பட்டது.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலையில் உள்ள 4 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது.
உடுமலை சப்-கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தலைமையில், உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட்டு நீதிபதி மணிகண்டன் முன்னிலையில் நடந்த அமர்வில் வக்கீல் செந்தில்குமாரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடந்த அமர்வில் வக்கீல் பிரபாகரனும் இடம் பெற்றிருந்தனர். ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு விஜயகுமார் தலைமையிலும், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் மாஜிஸ்திரேட்டு மீனாட்சி தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
உடுமலையில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரி தொடர்ந்த 20 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 16 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.
வாரிசு உரிமை கோருதல் உள்ளிட்ட சொத்து சம்பந்தப்பட்ட 47 சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 11 வழக்குகளில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 29 ஆயிரத்து 563-க்கு தீர்வு காணப்பட்டது. சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் 245 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 212 வழக்குகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 450-க்கு தீர்வு காணப்பட்டது.
வங்கிகளில் கடன் பெற்று, கடன் தொகையை திருப்பிச்செலுத்தாமல் வாராக்கடனாக இருந்து வந்தவர்களின் கடன் தொகையை வங்கிகளில் செலுத்தி கணக்கை நேர் செய்வதற்காக சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 10 பேருடைய வங்கிக்கடன் குறித்து பேசப்பட்டது. இதில் 2 பேரின் கணக்குகளுக்கு ரூ.15 லட்சத்து 15 ஆயிரத்து 663-க்கு தீர்வு காணப்பட்டது. 15 காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 4 வழக்குகளில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. உடுமலையில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற 4 அமர்வுகளில் மொத்தம் 337 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 245 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 37ஆயிரத்து 676-க்கு தீர்வு காணப்பட்டது.
உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், உடுமலை வக்கீல்கள் சங்கத்தலைவர்.ஸ்ரீதர், செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் கருப்புசாமி மற்றும் மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu