மானிய விலையில் பிரியாணி அரிசி ரக நெல்; விவசாயிகளுக்கு வழங்கல்
பிரியாணி அரிசி ரக நெல் விதைகள், உடுமலை விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நெல் ரகம் விஜிடி 1 ஆகும்.இது 125 முதல் 130 நாட்களில் மகசூல் கொடுக்கக் கூடியது. மாப்பிள்ளைச் சம்பா அரிசியைப் போல, சிறிய ரக அரிசியான இது பிரியாணி செய்வதற்கு ஏற்றதாகும்.ஏக்கருக்கு 2.33 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இலை மடக்குப்புழு, குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.உடுமலை வேளாண்மைத்துறைக்கு இந்த ரக நெல் விதைகள் 697 கிலோ வந்துள்ளது.ஒரு கிலோ ரூ. 41 விலையில் ரூ. 17.50 விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
தூயமல்லி பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பாதுகாக்கும் வகையில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மானிய விலையில் தூயமல்லி நெல் விதைகள் வழங்கப்படுகிறது.இந்த விதைகளை 50 சதவீதம் மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூ. 12.50 மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.
135 முதல் 140 நாட்கள் வயதுடைய இந்த நெல்லில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சம்பா, பின் சம்பா (ஆகஸ்ட் 3-ம் வாரம் முதல் செப்டம்பர் 2-ம் வாரம் வரை) பருவ விதைப்புக்கு ஏற்றது.பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி மருந்துகள் தெளிக்கும் அவசியம் இல்லை.முழுவதுமாக இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கு உகந்த ரகமாகும்.ஏக்கருக்கு 2200 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. எனவே நெல் நடவு செய்யும் விவசாயிகள் ஒரு ஏக்கரில் தூய மல்லி பயிரிட்டு பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu