அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்
Tirupur News-உடுமலை, அமராவதி பிரதான கால்வாயில், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், 9 கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
Tirupur News,Tirupur News Today- உடுமலை, அமராவதி பிரதான கால்வாயில், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், 9 கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,500 ஏக்கர் நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக நீர் வழங்கப்படுகிறது. அணையிலிருந்து, 64 கி.மீ., துாரம் அமைந்துள்ள பிரதான கால்வாய், 60 ஆண்டுக்கு மேல் பழமையானது. பல ஆண்டுகளாக பராமரிக்காததால், கான்கிரீட் கால்வாய் கரைகள் உடைந்தும், மடைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
மேலும், கால்வாயின் இருபுறமும் அமைந்துள்ள ஓடைகள் வழியாக வரும் நீர், கால்வாயில் கலந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான, குகை நீர் வழித்தடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால், பாசன காலத்தில் திடீர் உடைப்பு ஏற்படுவதோடு, நீர் விரயம், நீர் வினியோக சிக்கல் என பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, சாமராயபட்டி அருகே, 'அண்டர் டனல்' பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் கரை சேதமடைந்ததோடு, பாசன நீரும் வீணானது.
இந்நிலையில், பிரதான கால்வாயில், கி.மீ., 7.5 முதல், 16.5 வரையான, 9 கி.மீ., நீளத்துக்கு, 4.92 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதில், இரண்டு மேல்மட்ட நீர்வழிப்பாதை, 10 சிறிய அளவிலான 'அண்டர் டனல்', 20 மடைகள் புதுப்பித்தல் மற்றும் கரைகளில், கம்பி கட்டி கான்கிரீட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பணிகள் துவங்கியுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயை முழுமையாக புதுப்பிக்க நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது, 9 கி.மீ., துாரத்துக்கு புதுப்பிக்க ஒதுக்கிய நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்பட்ட பகுதியில், முழுமையாக கம்பி கட்டி, கான்கிரீட் கரையாக மாற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதால் இனிமேல் உடைப்பு ஏற்படாது,' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu