உடுமலையில் வறட்சியை தாங்கும் தென்னை மரங்கள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு

உடுமலையில் வறட்சியை தாங்கும் தென்னை மரங்கள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
X

Tirupur News- உடுமலையில் தென்னை வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள்.

Tirupur News- உடுமலைப்பேட்டையில், வறட்சியை தாங்கி வளரக் கூடிய தென்னை மரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

Tirupur News,Tirupur News Today- மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை மரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

தென்னை மரங்கள் இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், சுமார் 20.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.

தென்னை சாகுபடியில் நீர்ப்பற்றாக்குறை, சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திநகரில் அமைந்துள்ள மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை, மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தென்னை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் புதிய ரகத்தை உருவாக்கும் வகையில், வறட்சியை தாங்கும் தென்னை மரங்களை அடையாளம் காணுதல், தேங்காயின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல் மற்றும் வறட்சியை தாங்கும் வகையில் சாகுபடி நடைமுறையை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இது குறித்து மத்திய தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்துமன் கூறியதாவது,

தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் முதன்மை இணை ஆய்வாளராகவும், காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முதன்மை ஆய்வாளர் சம்சுதீன் மற்றும் சுப்ரமணியம், நிரல் உள்ளிட்டோரை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சி 2022 ஏப்ரலில் துவங்கியது. 2024 மார்ச் மாதம் நிறைவு பெறும்.கோவை , திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி அதிகமாக ஏற்படும் பகுதிகள், நிலத்தடிநீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து 24,168 தென்னை மரங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து 2,037 தாய் மரங்கள் தேர்வு செய்யப்பட்டது.இந்த தாய் தென்னை மரங்களிலிருந்து, விதை காய்களை சேகரித்து திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் வறட்சியை தாங்கும் தகவமைப்பு, மரபணு குழுவை கண்டறிந்து புதிதாக உருவாக்கப்பட்டு, புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story