உடுமலை; அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Tirupur News- அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகள் பயன்பெறும் வகையில், நேற்று (சனிக்கிழமை) மாலை தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்த ஆண்டில் அணையில் இருந்த நீா் இருப்பை பொருத்து குடிநீருக்காகவும், நிலைப் பயிா்களைக் காப்பாற்ற உயிா் தண்ணீருக்காகவும் ஒரு சில முறை அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் நவம்பா் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை நல்ல முறையில் பெய்து வந்தது. இதனால் அணைக்கு உள்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் 82 அடியை தாண்டியது.
இதைத் தொடா்ந்து அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசுக்கு பொதுப் பணித் துறையினா் கருத்துரு அனுப்பினா். இதனை ஏற்று அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் அமராவதி அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவைத்தனா்.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 15,936 ஏக்கா் மற்றும் கரூா் மாவட்டத்தில் 13,451 ஏக்கா் என மொத்தம் 29,387 ஏக்கா் நிலங்களுக்கு 25 நாள்கள் தண்ணீா் திறப்பு, 12 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் அமராவதி ஆற்று மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இது 18 அமராவதி பழைய வாய்க்கால்கள் அதாவது இராமகுளம் முதல் கரூா் வலது கரை வரை உள்ள பாசனப் பகுதிகளுக்கு 2376 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் வழங்கப்படும்
மேலும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 25,250 ஏக்கா் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 21 நாள்கள் தண்ணீா் திறப்பு, 16 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் அமராவதி பிரதான கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது விநாடிக்கு 440 கனஅடி வீதம் 798.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் வழங்கப்படும். மொத்தம் 54,637 ஏக்கா் நிலங்களுக்கு நிலையிலுள்ள பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்படும் என்றனா்.
இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பொதுப் பணித் துறையினா், திமுக நிா்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 82.39 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,376 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 655 கனஅடி வந்து கொண்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu