25 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அரசு; உடுமலை பகுதி மலைவாழ் மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு
Tirupur News- குழிப்பட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் நாகம்மாள் என்பவரை நேற்று, துணியில் தொட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் கிராம மக்கள்.
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் அடா்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
உடுமலை நகரில் இருந்து தெற்கே 30 கிலோ மீட்டா் தொலைவில் தொடங்குகிறது மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடா். நிலப் பகுதியில் இருந்து பல ஆயிரம் அடிகளுக்கு மேலே அமைந்துள்ள இந்த மலைகளுக்குள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு சுமாா் 3 ஆயிரம் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
செட்டில்மென்ட்டுகள் என்று அழைக்கப்படும் கிராமங்களைச் சோ்ந்த இந்த மலைவாழ் மக்கள் திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களாக இருந்து வருகின்றனா்.
கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூா், ஆட்டுமலை, ஈசல்திட்டு, சேலையூத்து, கொட்டையாறு, குருமலை, திருமூா்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, புளியம்பட்டி, கருமுட்டி என 15-க்கும் மேற்பட்ட செட்டில்மென்டுகள் உள்ளன.
ஒவ்வொரு செட்டில்மென்ட் கிராமங்களுக்கும் பல மலைகளைக் கடந்து போக வேண்டிய நிலையில் ஊா் மூப்பன் என்று பெயரிட்ட ஒருவா் அந்தந்த கிராமங்களை வழிநடத்தும் தலைவராக இருந்து வருகிறாா். இவா்கள் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் மூலம் ஏற்படும் ஆபத்துடன் ரேஷன் பொருள்களுக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பல கிலோ மீட்டா் அடா்ந்த வனப் பகுதியில் நடந்து மலையில் இருந்து கீழே இறங்கி வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குழிப்பட்டிசெட்டில்மென்ட் பகுதியைச் சோ்ந்த ஒரு கா்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தாயும் குழந்தையும் இறந்துவிட்டன. இதுபோன்று சாலை வசதி இல்லாததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், குழிப்பட்டி செட்டில்மென்ட் பகுதியைச் சோ்ந்த மகு என்பவரின் மனைவி நாகம்மாள் (22) என்பவருக்கு திங்கள்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குழிப்பட்டியில் இருந்து பொன்னாலம்மன் சோலை வழியாக தரைப்பகுதிக்கு தொட்டிலில் கட்டி தூக்கி வந்துள்ளனா்.
பொதுவாக முறையான சாலை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததால் இது போன்ற மோசமான நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எங்களது செட்டில்மென்டுகளில் குடிநீா் வசதி இல்லை. இந்த நிலை தொடா்ந்தால் இந்தியாவில் அழிந்து வரும் பழங்குடி மக்களின் பட்டியலில் திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைவாழ் மக்களின் பெயா்களும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. சாலை அமைக்க 2006 வன உரிமைச் சட்டத்தில் இடம் இருந்தும் தொடா்ந்து வனத் துறையினா் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனா்.
கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீா் வசதி, மருத்துவ வசதி என பல்வேறு அடிப்படை கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் வரும் மக்களவைத் தோ்தலில் மலைவாழ் மக்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம் என்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu