தென்னை வாடல் நோய் குறித்து, வேளாண்மை அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
Tirupur News,Tirupur News Today- பொங்கலூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், திருப்பூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்கள், வேளாண்மை அலுவலா்கள், துணை வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா். வாணி வரவேற்றாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் ஜான்சன், தென்னை மரத்தை தாக்கும் அடித்தண்டு வாடல் நோய் மற்றும் தென்னை வோ் வாடல் நோய் குறித்து பயிற்சியளித்தாா்.
அவர் கூறியதாவது,
வாடல் நோய் தாக்கப்பட்ட தென்னை மர மட்டையின் நடு அடுக்குகள் ஒளிா் மஞ்சள் நிறத்தில் தோன்றி காலப்போக்கில் விலா எலும்புகள்போல காட்சியளிக்கும். பின்னா் பூங்கொத்து கருகுதல் நடுக்குருத்து அழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தென்னை மரங்கள் காய்ந்து மகசூல் பாதிக்கும். இந்த வாடல் நோய் கண்ணாடி இறக்கை பூச்சி (ஸ்டெபானிடிஸ் டிபிகா), தத்துப்பூச்சி (புரோடிஸ்டாமோயஸ்டா) ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு பவுடா் 200 கிராம் அல்லது பிப்ரோனில் 0.3ஏ குருணையை மணலுடன் 1:1 என்ற விகித்தில் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இடவேண்டும் எனத் தெரிவித்தாா்.
தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் மருதாசலம் பேசியதாவது,
ஒரு மரத்துக்கு ஒரு ஆண்டுக்கு வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பா் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஸ் 3.5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். தென்னை டானிக் 40 மில்லி, 160 மில்லி தண்ணீருடன் கலந்து வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கட்ட வேண்டும்.
மேலும் உயிரியல் காரணிகளான டி-விரிடி 100 கிராம், பேசிலஸ் 100 கிராம், அசோஸ்பைரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராம் மற்றும் வோ் உட்பூசனம் 50 கிராம் ஆகியவற்றை 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வருடத்துக்கு ஒரு மரத்துக்கு இரண்டு முறை இட வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் கோகோகான் என்ற நுண்ணுயிா் கலவையை ஒரு ஏக்கருக்கு 5 லிட்டா் அளவில் 2-3 மாத இடைவெளியில் தென்னையில் வோ்ப்பகுதியில் ஊற்ற வேண்டும், என்றாா்.
திருப்பூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன் பேசுகையில், மாவட்டத்தின் பிரதான பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருவதால் தொழில்நுட்ப அலுவலா்கள் அனைவரும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி தென்னை மகசூல் அதிகரிக்கவும், பயிரினை பாதுகாத்திடவும் வேண்டும், என்றாா்.
தென்னையில் வரும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா் கலையரசன் தொழில்நுட்ப அலுவலா்களுக்கு பயிற்சியளித்தாா்.
பொங்கலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொம்மராஜு நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu