திருப்பூர்; கோவில்களில் பொங்கல் விழா

திருப்பூர்; கோவில்களில் பொங்கல் விழா
X

Tirupur News- திருப்பூரில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாக்கள் நடைபெற்றது.

மடத்துப்பாளையம்

அவிநாசி, மடத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், 20ம் தேதி காப்புக்கட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அபிஷேக தீபாராதனை, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று நுாற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுப்பாளையம்

அவிநாசி அருகே புதுப் பாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நத்தக்காடையூர்

காங்கயம், நத்தக்காடையூரில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 20ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. தினமும் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நேற்று அதிகாலை, 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். அக்னி பூவோடு எடுத்தல், அலகு குத்தி வலம் வருதல் என பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மறு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

முத்துக்குமார சுவாமி பொங்கல் விழா: அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்

அவிநாசி அருகே சேவூரில், சித்தர் முத்துக்குமார சுவாமி ஜீவசமாதி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த 24ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா துவங்கியது.

தினமும் சேவூர் பத்ர காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமார சுவாமிக்கும், முஸாபரி தோட்டத்தில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதியிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பொங்கல் வைத்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. சித்தரின் ஜீவசமாதியில் பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!